பாரதிதாசன்
http://en.wikipedia.org/wiki/Bharathidasan
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!பொழிலிடை வண்டின் ஒலியும் – ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் – வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் – பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் – நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை – என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள் – அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் – தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!நீலச் சுடர்மணி வானம் – ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் – ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் – நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் – தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?செந்நெல் மாற்றிய சோறும் – பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை – கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு – கானில்
நாவி லினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! – உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
நன்றி : http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165thamizh.htm
உணர்வினைத் தாண்டிய தாசன், உயர்கவியினில் தாண்டிய மேலோன், அதிதமிழ் குருதியில் சேர்த்து, புதுவிழந் தமிழினில் யாத்தோன், அவர்கவி உணர்வினை தூண்டும், போலிகள் பொய்யுரை ஓட்டும், தமிழுணர்வினைக் காட்டிப் பணத்தை,தம்முடன் சேர்த்து வாழ்வோர், தகுதியைச் சட்டென வீழ்தும், இவர்கவி தூண்டுதல் மூலம்,தமிழ்வையக (தமிழ்நாடு)ஆட்சியைப் பாரீர், இத்தகை மேன்மையை உணார்ந்திடின்,அக்கவி பாரதி ஈறாய்ப்,பாரதிதாசன் குருதியில் தமிழுணர்வை, கலந்துயி(ர்) ரோட்டந் தன்னை,மான்புடன் சேர்த்தநல் கவியின்மெலோன், அவர்நாமம் கூறீட யாரிவ்விடமுளர், அவரின்பெயரால் ஏத்தனை ஏத்தனை, அவரெஇருந்தால் என்னசொல்வாரோ?….”என்ன சொல்வாரோ? “+கா.சிவா+(பிறாண்ஸ்)